News 7 செய்தியாளருக்கு ஆதரவு குறல் கொடுத்த அண்ணாமலை…!

தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக நேசபிரபு பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக இவர் செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் மர்ம நபர்கள் இவரை நோட்டம் விட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இவரை தேடி மர்ம நபர்கள் வீடு வரை வந்திருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை.இந்த விஷயத்தை அறிந்த நேசபிரபு உடனடியாக அவசர எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்திற்கும் போன் செய்து புகார் அளித்திருக்கிறார். ஆனால் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாததால், நேரில் வந்து புகார் அளிக்கும்படி மறு முனையில் பேசிய போலீசார் கூறியிருக்கிறார்.வீட்டிற்கு சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த நேசபிரபு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பல்லடத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற அவர், மீண்டும் போலீசுக்கு அழைத்துள்ளார். போலீசாரிடம் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம நபர்கள் நேசபிரபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் நேசபிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய அறிக்கை பின்வருமாறு,

‘திருப்பூர் பகுதி @news7tamil செய்தியாளர் சகோதரர் திரு நேசபிரபு அவர்களை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.

திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *